மதுரையில் கிரானைட் குவாரிகள் தொடங்க உரிமம் வழங்க சென்னை ஐகோர்ட்டு தடை

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகள் தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-12-11 09:51 GMT
மதுரை,

மதுரை மாவட்டத்தில் 175க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டன.  சட்டவிரோத வகையில் செயல்பட்ட கிரானைட் குவாரிகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் சென்னை ஐகோர்ட்டு குழு ஒன்றை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதன்படி, கடந்த 2015ம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், கிரானைட் குவாரி முறைகேடு பற்றிய புகார்களை தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு முதல் கிரானைட் குவாரிகள் செயல்பட அரசு அனுமதிக்கவில்லை.  எனினும் அரசு, தனியார் பயன்பாட்டிற்காக ஜல்லிக்கற்களை வெட்டி எடுக்கவும் மற்றும் கல் குவாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோன்று, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத, குற்ற வழக்குகளில் சிக்காத, 91 கிரானைட் குவாரிகளின் உரிமமும், மாவட்ட நிர்வாகத்தினரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்படவில்லை.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் சிக்காத கிரானைட் குவாரிகளையாவது திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகள் தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்