மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்துள்ளனர்.

Update: 2020-12-11 08:28 GMT
மதுரை,

ஆயுர்வேத யுனானி ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் ஆங்கில மருத்துவ மேற்படிப்பு பயின்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் இது போன்ற மருத்துவர்களின் அறிவிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி இவர்களின் போராட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளனர்.

இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் காணொலி காட்சி வழியாக பேசிய போது, இந்த முறையீட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்