அ.தி.மு.க. அரசின் ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் கே.என்.நேரு அறிக்கை

அ.தி.மு.க. அரசின் ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கே.என்.நேரு கூறியுள்ளார்.

Update: 2020-12-11 00:07 GMT
சென்னை,

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏதோ தன் துறையில் ஊழலே நடக்கவில்லை என்று அப்பாவி போல் போட்ட வேடத்தை கலைத்து விட்டது சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள இடைக்கால தடை உத்தரவு. 118 நிறுவனங்கள் இருக்கும் போது 8 நிறுவனங்களிடம் ஜி.பி.எஸ். கருவி வாங்க போக்குவரத்துத்துறை அளித்த உத்தரவுக்கு தடை வழங்கியுள்ள ஐகோர்ட்டு போக்குவரத்து செயலாளர் ஜனவரி 18-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

தனியார் கம்பெனிகள் தான் ஒளிரும் பட்டை உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர். அரசு நிறுவனம் தயாரிக்கிறது என்று எங்கள் தலைவர் கூறவே இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்த குதர்க்கமான மறுப்பு?. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டது, ஏன் ஒரு சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டை உள்ளிட்ட கருவிகளை பொருத்திய பிறகு அந்த தனியார் நிறுவனங்களின் வெப் சைட்டில் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் ஒப்பிட்டுப் பார்த்து எப்.சி. வழங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார் என்பதுதான். அதற்கு அமைச்சர் தனது பேட்டியில் கடைசி வரை பதில் சொல்லவே இல்லை.

எங்கள் தலைவர் எப்போதும் ஆதாரபூர்வமான ஊழல்களைத்தான் அறிக்கையாக கொடுக்கிறார். இன்னும் பல ஊழல் பட்டியல்களை எங்கள் தலைவரிடம் அரசு அதிகாரிகள் கொடுத்து வைத்துள்ளார்கள். அவை சமயம் வரும் போது சுனாமி போல் அ.தி.மு.க. அமைச்சர்களை வந்து தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அவர் துறையில் இருமுறை ஐகோர்ட்டு ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட உத்தரவுகளுக்கு தடை உத்தரவும் வழங்கி விட்டது. என் துறையில் ஊழல் நடக்கவில்லை என்று இதற்கு பிறகும் அமைச்சர் பல்லவி பாடி தன்னையும் ஏமாற்றி, மக்களையும் ஏமாற்ற கூடாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வேக கருவி அமைக்கும் டெண்டரிலும், ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு போட்ட அரசு கோப்புகளை இன்றே லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையிடம் ஒப்படையுங்கள். ஊழல் உண்டா, இல்லையா என்பதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையே விசாரிக்கட்டும். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திராணியும், தெம்பும் இருக்கிறதா?. அமைச்சர் இந்த ஊழல் கோப்புகளை கொடுக்கிறாரோ, இல்லையோ லஞ்ச ஒழிப்புத் துறையே சம்பந்தப்பட்ட கோப்புகளைக் கைப்பற்றி எங்கள் தலைவர் கேட்டது போல் உடனடியாக விசாரணையை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்