விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவான பாரத் பந்த்: தமிழகத்தில் நிலவரம் என்ன...?

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

Update: 2020-12-08 15:52 GMT
சென்னை

3 வேளாண் சட்டங் களை கடும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், அச்சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் அனைவரும் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களை நீக்க வாய்ப்பில்லை என்றும், அதில் திருத்தங்கள் வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

‘பாரத் பந்த்’ சமயத்தில் பாதுகாப்பை கடுமையாக்கி, அமைதி பேணப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டு இருந்தது.

 விவசாயிகளின் இந்த பாரத் பந்த்  வட மாநிலங்களில்  வெற்றிகரமாக நடந்தது.    பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தங்களது ‘சக்கா ஜாம்’ போராட்டத்தின் போது முக்கிய சாலைகளைத் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். 11 மாநிலங்களில்  பாரத் பந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கார் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 

 வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூர், திருத்துறைபூண்டி, மயிலாடுதுறை, விழுப்புரம், ஈரோடு, புதுக்கோட்டை, நாகை மற்றும் தேனி,திருவாரூர் திருத்துறைபூண்டி, மயிலாடுதுறை, விழுப்புரம் ஈரோடு, புதுக்கோட்டை, நாகை மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் 10,000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பால் மற்றும் மருந்துக்கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பாலபாரதி தலைமையில் பேரணியாக வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலிருந்து பேரணியாக வந்த அக்கட்சியினர் திண்டுக்கல் பேருந்து நிலையம், பிரதான சாலை வழியாக பெரியார் சிலை வரை காவல்துறையின் தடையை மீறி பேரணியாக வந்தனர்.மத்திய அரசுக்கு எதிராகவும், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலைமறியல் போராட்டம் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு  திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப், விவசாய அணி நிர்வாகி பொன்னையா பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன், சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தலைமை வகித்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடி  திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் மறியலுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

மதுரை கிழக்கு ஒத்தக்கடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவாக. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல செயலாளர் அழகர், சக்திவேல், கதிரேசன் மற்றும் அனைத்து அணியினரும் கலந்து கொண்டனர்.விவசாயம் காப்பாற்ற பட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 கரூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை கரூர் நகரக் காவல் துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் 38, குளித்தலையில் 25, மாயனூர் 13 என 4 இடங்களில் நடந்த மறியலில் 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை, ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை அண்ணா சிலை முன் திமுக, கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சயில் கிராமிய பாடல்கள் பாடியும், இசைக்கருவிகள் இசைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

புதுக்கோட்டையில் சங்கு ஊதி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் உழவர் சந்தை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. நெல்லை, சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். 

கடலூர், திருச்சி, கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பாரத் பந்துக்கு  ஆதரவு தெரிவித்து கோவையில் பெரியகடை வீதி, வின்சென்ட் சாலை, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, செல்வபுரம், ராஜவீதி, என்.எச்.சாலை, ஆவாரம்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, போத்தனூர், செல்வபுரம், ரத்தினபுரி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் 60 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின.  அதேபோல்,கம்யூனிஸ்ட்  சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ, வேன், டாக்ஸி போன்ற வாகனங்கள் காலை முதல் மாலை வரை ஓடவில்லை. அதேசமயம், பேருந்துப் போக்குவரத்து எவ்வித இடையூறும் இன்றி இயங்கியது.

மேலும் செய்திகள்