தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
‘புரெவி’ புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நேற்று) அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.