விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்

டெல்லியிலே குவிந்துள்ள விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல, நமக்காக என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2020-12-08 01:02 GMT
சென்னை,

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று விவசாயிகள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“வேளாண் திருத்த சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என்று பிரதமரும், இடைத்தரகு அரசியல் தொழில் செய்யும் முதல்-அமைச்சரும் கூறுகிறார்கள். இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றால், விவசாயிகளின் உற்பத்தியை வாங்கக்கூடியவர்கள் யார் என்பது நியாயமான கேள்வி. உலைநீருக்கு பயந்து, எரிகிற அடுப்பில் குதித்த கதையாகத்தான் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் விளக்கம் உள்ளது. இடைத்தரகர்கள் ஒழிகிறார்களோ இல்லையோ, விவசாயத்தை முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்களே கையகப்படுத்தும், அதற்கான வழிவகைகளை இந்த வேளாண் திருத்த சட்டங்கள் கொண்டு வருகின்றன.

கார்ப்பரேட்டுகளை நுழைக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் பறிபோகும் என்பதைக்கூட மறைத்துவிட்டு, மத்திய அரசிற்கு வக்காலத்து வாங்கி விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்திய உணவுக்கழகம், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் அது விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பல்ல. பொதுவினியோக திட்டத்தின் மூலம் தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றி வரும் கோடிக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச்சாவை நோக்கி தள்ளப்படும்.

மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கக்கூடிய மானிய விலையிலான உணவுப்பொருட்கள், மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்து வழங்கக்கூடிய உணவுப்பொருட்கள் ஆகியவை தடைப்படும்போது, நியாயவிலை கடைகள் எனப்படும் ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும்.

இந்த வேளாண் திருத்த சட்டங்களுடன், மின்சார திருத்த சட்டத்தின் வாயிலாக விவசாயத்திற்கு கிடைத்து வரும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய முனைப்பாக இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. ஆற்றுநீர் சிக்கல்கள் நிறைந்துள்ள தமிழகத்தில், விவசாயம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 1989-1991 தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கினார் கருணாநிதி. அதன் விளைவாக நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் பெருகி விவசாயிகள் நலன் பெற்றனர். அந்த நலனுக்கு வேட்டு வைக்கும் வகையில் மின்சார திருத்த சட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து தான் டெல்லியிலே விவசாயிகள் போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டிலும், இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயத்தை அப்படியே அபகரித்து, தங்களை வளர்க்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதுதான் பா.ஜ.க அரசின் வேளாண் திருத்த சட்டங்களின் ஒற்றை நோக்கம். அதன் மூலமாக, மாநில அரசின் உரிமைகளையும் சேர்த்தே பறிக்கிறது, மத்திய பா.ஜ.க அரசு. மாநில உரிமை எனும் வேட்டி உருவப்படுவதைக்கூட உணராமல் உணர்ந்தாலும் உறைக்காமல் அடிமைச் சேவகம் செய்யும் ஒரு முதல்-அமைச்சர் வெட்கமின்றி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்கிறார் என்பது வேதனையிலும் வேதனை.

தலைநகர் டெல்லியிலே குவிந்துள்ள விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல, நமக்காக! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க. பட்டினிச் சாவைத் தடுத்திட! நம்மை காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம். அதனை வெற்றி பெறச் செய்வோம்!”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்