தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மத்திய பிரதேச மந்திரி வருகை
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த மத்திய பிரதேச மந்திரி தேர்வு முறைகள், மருத்துவ ஆராய்ச்சிகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
சென்னை,
மத்திய பிரதேச மாநிலத்தின் மருத்துவ கல்வி, போபால் விஷவாய்வு விபத்து உதவி மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஸ்வாஸ் சாரங், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு நேற்று
வருகை தந்தார்.
அவரை, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் வரவேற்றார். பின்னர் அவர், மந்திரிக்கு பல்கலைக்கழகத்தின் பல்வேறு ஆய்வகங்கள், துறைகள் மற்றும் பிரிவுகளை சுற்றி காண்பித்தார். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், தேர்வு முறைகள் குறித்தும், பல்கலைக்கழகத்தின் இதர பணிகள், ஆட்சி மன்ற குழு, பேரவை குழு, நிதி குழு, பாடத்திட்டங்கள் வகுக்கும் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கொரோனா நோய் ஆராய்ச்சி முறைகள், சித்த மருத்துவம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்தல், நோய் எதிர்ப்பு சக்திக்கு அளிக்கப்படும் கபசுர குடிநீர் ஆகியவை குறித்தும் மந்திரி விஸ்வாஸ் சாரங் கேட்டறிந்தார்.
இந்த கலந்துரையாடலில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் ம.பா.அஸ்வத் நாராயணன், தமிழ்நாடு மாநில பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் திட்ட இயக்குனர் டாக்டர் சு.வா.சந்திரகுமார், செனட் உறுப்பினர் லட்சுமி நாராயணன், சென்னை வர்த்தக சங்க உறுப்பினர்கள் அசோக், சந்திரசேகரன், பல்கலைக்கழகத்தின் முதன்மை பகுப்பு ஆய்வாளர் என்.நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.