தமிழகத்தில்13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-05 23:12 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 வாரமாக பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. வங்க கடலில் நிலவிய நிவர், புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தின் வட, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

அதன் தொடர்ச்சியாக கடைசியாக வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் நிலைக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்றும் ஆங்காங்கே மழை பெய்தது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பும் இருக்கிறது என ஆய்வு மையம் கூறி இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘கொத்தவாச்சேரி 19 செ.மீ., நாகப்பட்டினம் 16 செ.மீ., குடவாசல், புவனகிரி 15 செ.மீ., சேத்தியாத்தோப்பு 14 செ.மீ., தரங்கம்பாடி 13 செ.மீ., சீர்காழி, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், வேம்பாக்கம், ஸ்ரீமுஷ்ணம் தலா 12 செ.மீ., ராமேசுவரம், அண்ணா பல்கலைக்கழகம், திருப்பூண்டி, காயல்பட்டினம் தலா 11 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், கொள்ளிடம், எம்.ஜி.ஆர். நகர், பெலாந்துறை தலா 10 செ.மீ., ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், தூத்துக்குடி, தலைஞாயிறு, சிதம்பரம் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்