கடலூரில் மழை வெள்ள சேதங்கள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு வந்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். குறிஞ்சிப்பாடி, பரதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஸ்டாலின், அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர்களுக்கு போர்வை, உணவுப்பொருட்கள் மற்றும் தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார். இதன் பிறகு மேட்டுப்பாளையத்தில் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள இடங்களுக்குச் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.
அதனை தொடர்ந்து சிதம்பரம் பகுதிக்குச் சென்று அங்கு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார். அதன் பிறகு திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்று அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.