“திமுக போராட்டத்தில் கருப்புக் கொடிகள் உயரட்டும் தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்” - திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2020-12-04 11:14 GMT
சென்னை,

மத்திய அரசின் புதிய 3 வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து சென்றுள்ள விவசாயிகளை சிங்கு, டிக்ரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.இதனால் எல்லையிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய பாஜக அரசு, வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது எதிர்ப்பை தெரிவித்து பதவி விலகினார். அதனை தொடர்ந்து அந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

திமுகவின் சார்பில் இந்தத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து ஏற்கெனவே திமுகவும் தோழமைக் கட்சியினரும் கொரோனா பேரிடர் கால நெறிமுறைகளுக்குட்பட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் போக்கினை உணர்ந்த பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் வகையில், ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நடத்தி, இந்தியத் தலைநகரில் தொடர் முற்றுகைப் போராட்டதை கடுங்குளிரிலும் மேற்கொண்டு வருகிறார்கள். கோரிக்கைகளைப் புறக்கணித்து, பேச்சுவார்த்தை என்ற பெயரிலான மத்திய அரசின் திசை திருப்பல்களையும் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் ஏற்கவில்லை. 

எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டு, மதச்சாயம் பூசிப் போராட்டத்தை நசுக்கலாம் என்கிற ஆட்சியாளர்களின் சதித்திட்டமும் எடுபடவில்லை. நாளுக்கு நாள் வலிமை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் ஆதரவு பெருகுகிறது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை (டிசம்பர் 5) காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவின் சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அறவழியில், ஜனநாயக முறையில் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்! கருப்புக் கொடிகள் உயரட்டும்! தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்