டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி(நாளை) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க. சார்பில் போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘டெல்லி சலோ’ என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியுமாக காத்துக்கிடந்து; தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள், எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, தீரத்துடன் போராடி வருவது கண்டு பெரிதும் வியந்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம், மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றி என இக்கூட்டம் கருதுகிறது. வேளாண் சட்டங்களுக்கு வெட்கமில்லாமல் ஆதரவளித்து, தனது விவசாயிகள் விரோதப் போக்கையும், மத்திய பா.ஜ.க. அரசுக்கான காரியக் கூத்தாடும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தி ‘அரசியல் கூட்டணிக்காக’ இங்குள்ள அ.தி.மு.க அரசு பெருமைப்பட்டுக் கொண்டதை, இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.
இந்தியாவே இன்றைக்கு எழுந்து நின்று, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, டெல்லி செங்கோட்டை சிம்மாசனத்தில் வீற்றிருப்போரின் செவிகள் கிழியும் அளவிற்கு இடியென முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்து, அதற்கு முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கிய ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவில் உண்டு என்றால், அது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் போட்டி போட்டுக் கொண்டு பா.ஜ.க.வை விட ஒரு படி மேலே சென்று ஆதரித்த கட்சி என்றால் அது அ.தி.மு.க. மட்டும்தான்.
பா.ஜ.க.விற்கு எதிலும் எப்போதும் பல்லக்குத் தூக்கி; தமிழக விவசாயிகளுக்கும், தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அ.தி.மு.க. ஆட்சிக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
விவசாயிகளின் உணர்வு கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகரம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற 5-ந்தேதி (நாளை) காலை 10 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தி.மு.க. சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று, இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.