‘புரெவி’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை: தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரை திரும்ப நடவடிக்கை - தமிழக அரசு தகவல்
‘புரெவி’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
‘புரெவி’ புயலையொட்டி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின்படி கடந்த 28-ந் தேதி தென் கிழக்கு வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளதாகவும், இது வட இலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியை கடந்து குமரி கடல் வழியே அரபி கடலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் எச்சரிக்கை குறித்த தகவல் உடனடியாக அனைத்து மீனவர்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புயல் எச்சரிக்கைக்கு முன்னரே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ள படகுகளை, செயற்கைகோள் தொலைபேசி மற்றும் ‘வி.எச்.எப்.’ தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்புகொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு கரை திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த 29-ந் தேதி முதல் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மீன்பிடி படகுகளும் புதிதாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பாக வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டனர். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மீன்பிடி படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அரசு மேற்கொண்ட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 2-ந் தேதி (நேற்று) வரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 120 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பி உள்ளன.
மீதமுள்ள குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 36 படகுகள் உள்பட 124 தமிழக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் லட்சதீவு, கொல்லம், கொச்சின், மங்களூரு, கோவா, ரத்தினகிரி, மும்பை மற்றும் வெராவல் அண்மை கடல் பகுதிகளில் உள்ளன. மேற்கண்ட படகுகள் அனைத்தும் தொடர்புகொள்ளப்பட்டு அவற்றின் இருப்பிட புவிக்குறியீடுகள் குறித்த தகவல்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் கடலில் உள்ள படகுகளை எச்சரித்து கரைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை தொடர்புகொண்டு பாதுகாப்பாக கரை திரும்ப அறிவுறுத்தும் வகையில் குமரி மாவட்டம் தூத்தூர் (04651-226235) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் (0461-2320458) 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்துறை இயக்குநரக மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் (044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தற்போது கடலில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மூலம் மீன்பிடி படகுகளை தொடர்புகொண்டு புயல் எச்சரிக்கையை தெரிவித்து உடனடியாக படகுகளை கரை திரும்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் அரசு செயலாளர்களுக்கு, அந்த மாநில மீன்பிடி துறைமுகங்களில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை நிறுத்துவதற்கு அனுமதி மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த படகுகள் அண்டை மாநிலங்களின் கரைக்கு திரும்பும்போது, அவர்களுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் உணவு போன்ற வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் மால்பே மற்றும் மராட்டிய மாநிலம் ரத்தினகிரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அரசு மேற்கொண்ட ஒருங்கிணைந்த புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. மீதம் உள்ள அண்மை கடலிலுள்ள படகுகளும் விரைவில் பாதுகாப்பாக கரை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.