4-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் வரும் 5-ந் தேதி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 5-ந் தேதி அவருடைய நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சென்னை,
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்து பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது கட்சியினர் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாகும்.
ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந் தேதி சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் கலந்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும், பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயலலிதா நினைவு நாளன்று அவரை பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் மன ஆறுதல் பெறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும்.
மேலும், அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வருகிற 5-ந் தேதியன்று ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.