செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு - அதிகாரிகள் தகவல்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்னும் ஓரிரு நாளில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-11-16 19:39 GMT
பூந்தமல்லி, 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதிநீர் மற்றும் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,781 மில்லியன் கனஅடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 1,720 கனஅடியாகவும் இருந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பெய்த கன மழையால் ஏரிக்கு 145 மில்லியன் கனஅடி நீர் வந்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாலாறு வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட பொதுப்பணி துறை அதிகாரிகள் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தனர்.

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட அறைகள் அமைப்பது குறித்தும், ஏரியின் மதகுகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “தற்போது முழுக்க, முழுக்க அதிக அளவில் மழைநீர் மட்டுமே ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இனி தொடர்ந்து மழை பெய்தாலோ அல்லது விட்டு, விட்டு கனமழை பெய்தாலோ நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் தொடர் கனமழை பெய்து, அதனால் நீர்மட்டம் சுமார் 22 அடியை தொட்டால் மட்டுமே உபரிநீர் திறக்கப்படும். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை” என்று அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்