மழைபாதிப்பு இருந்தால் 101-ல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - டிஜிபி ஜாபர்சேட் தகவல்
மழைபாதிப்பு இருந்தால் 101-ல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தீயணைப்பு துறை இயக்குனர் டிஜிபி ஜாபர்சேட் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரிக்கடல் முதல் வடதமிழக கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளதாக கூறினார்.
மேலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி, கடலூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை தொடரும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மழைபாதிப்பு இருந்தால் 101-ல் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தீயணைப்புத்துறை இயக்குனர் டிஜிபி ஜாபர்சேட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சென்னையில் மழை பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் 101-ல் தகவல் தெரிவிக்கலாம். 9445086080 என்ற எண்ணிலும் பொதுமக்கள் மழை பாதிப்பு பற்றி தகவல் தெரிவிக்கலாம். பருவமழை தாக்கத்தினை எதிர்கொள்ள தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.