தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-16 13:03 GMT
சென்னை,

மதுரை: உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, ஏழுமலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

திருச்சி: லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, சமயபுரம்,மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

நாமக்கல்: ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், ஆண்டகளூர்கேட், அத்தனூர் பகுதிகளில் மழை பெய்தது.

மயிலாடுதுறை: சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலையில் இருந்து 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் கரைபுரண்டோடிய மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு சென்றன.

நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பாதியளவு மூழ்கியவாறு தத்தளித்த நிலையில் ஊர்ந்து சென்றன.

கடலூர் மாவட்டம்: வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடர்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனாபொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 27 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியது இதனால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், காவனூர், செந்தமிழ் நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் அவதியுற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அருகிலிருந்த சாலையோர சிறு உணவகம் முழுவதுமாக நொறுங்கியது. மின்கம்பம் மீதும் புளியமரம் விழுந்ததை அறிந்து, உடனடியாக அப்பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வந்தவாசி அடுத்த வழூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கிருஷ்ணன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டு சுவரும் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையினால், பீர்க்கன்காரணை ஏரியின் கரைகள் சேதமடைந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்துள்ளது அத்திபட்டு புதுநகர் பகுதியில் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்