சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது வழக்கு - காவல்துறை நடவடிக்கை
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
காற்றுமாசு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது.
இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே எச்சரித்திருந்தார். அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ, அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
இந்த விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு தீபாவளி அன்று போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாக 348 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.