தமிழகத்தில் கொரோனா பிரச்சினையை மறந்து வழக்கம்போல் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடிய மக்கள்
தமிழகத்தில் மக்கள் கொரோனா பிரச்சினையை மறந்து வழக்கம்போல் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, உற்றார்-உறவினர்களுடன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் சாப்பிட்டும் தீபாவளியை வெகுவிமரிசையாக கொண்டாடினர். இந்த ஆண்டு கொரோனா பரவலால் தீபாவளியை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் வழக்கம்போல் தீபாவளியை கொண்டாடினர்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை, இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இதனால் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து, பரிசு பொருட்களை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பகிர்ந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளியையொட்டி சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தனர். முன்னதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பட்டாசுகள் வெடிக்கும்போது செய்யவேண்டியவை மற்றும் செய்யாகூடாத செயல்கள் குறித்து சில வழிமுறைகளை வெளியிட்டு இருந்தனர். குறிப்பாக குறைவான சத்தம் மற்றும் காற்றை அதிக அளவில் மாசு படுத்தாத பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.
அதுமட்டுமின்றி கோவில்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது என்று எச்சரித்து இருந்தனர்.
தீபாவளியையொட்டி நேற்று சென்னை மெட்ரோ ரெயில்களிலும், பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.