தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து, அரசு பஸ்களில் 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து அரசு பஸ்களில் 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர்.

Update: 2020-11-14 07:50 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற வகையில் கடந்த 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 510 பஸ்களும், பிற ஊர்களிலிருந்து 5 ஆயிரத்து 247 பஸ்கள் என ஆக மொத்தம் 14 ஆயிரத்து 757 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று வரை இந்த பஸ்களில் பயணம் செய்ய 93 ஆயிரத்து 625 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து 37 ஆயிரத்து 432 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து 56 ஆயிரத்து 193 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.4 கோடியே 48 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த 11, 12 மற்றும் 13-ந்தேதிகளில் சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு வரை சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பயணிகளின் வருகைக்கு ஏற்ப சென்னையிலிருந்து 20 பஸ்களும், பெங்களூருவில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 30 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர ஓசூரில் இருந்து முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் பல்வேறு இடங்களுக்கு 110 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகளிடம் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலித்தால், 18004256151 என்கிற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மோட்டார் வாகன போக்குவரத்து துறையிலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 48 இடங்களில் சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கண்ட தகவல் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்