தீபாவளிக்கு அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருவதால் அதிக அளவில் பார்வையாளர்கள் படம் பார்க்க வருவார்கள். அப்போது அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் 7 மாதங்களுக்கு பிறகு 50 இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என்ற அரசு நிபந்தனையோடு நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன. புதிய படங்கள் வெளியாகாததால் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களான ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் விசுவாசம், தனுசின் அசுரன் மற்றும் தாராள பிரபு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.
சில தியேட்டர்களில் எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல், ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. ஆனால் கொரோனா அச்சத்தாலும் பழைய படங்களை திரையிட்டதாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
சுமார் 15 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள புதிய படமான பிரேக் த சைலன்ஸ் என்ற கொரியா படத்துக்கு மட்டும் 300 பேர் வரை வந்திருந்தார்கள். சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் இந்த படம் ஓடியது.
பார்வையாளர்கள் வராததால் மொத்தம் உள்ள 1,140 தியேட்டர்களில் 800 தியேட்டர்களை திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மீதி தியேட்டர்களில் மட்டும் படம் ஓடின. இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் வி.பி.எப் கட்டண பிரச்சினையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டு தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்து உள்ளனர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத், சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி நடித்துள்ள இரண்டாம் குத்து 2, தட்றோம் தூக்குறோம், எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் நடித்துள்ள மரிஜுவானா, ஸ்ரீசாய் செல்வம் இயக்கத்தில் ஜிப்ஸி ராஜ்குமார் நடித்துள்ள பச்சைக்கிளி, அமுதவாணன் இயக்கத்தில் பவாஸ் நடித்துள்ள கோட்டா ஆகிய 6 புதிய படங்கள் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (14-ந்தேதி) திரைக்கு வருகின்றன.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது பழைய படங்களை திரையிட்டதால் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுமார் 800 தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. தீபாவளிக்கு புதிய படங்கள் திரைக்கு வருவதால் நிலைமை சீராகி அதிக அளவில் பார்வையாளர்கள் படம் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்றார்.