மதுரை எய்ம்ஸ் பணி 3 ஆண்டுகளில் முடிவடையும் - ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.

மதுரை எய்ம்ஸ் பணி 3 ஆண்டுகளில் முடிவடையும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-10 03:03 GMT
மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் என்ற கூட்டத்தில் பேசிய அவர், 2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த பிரதமர் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார். 

மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் டிசம்பர் மாதம் பணி தொடங்கும் என்று பதில் கூறி இருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், எந்த டிசம்பர் மாதம் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.  

இந்நிலையில் மதுரையில் இன்று அரசு சார்பில் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நில அளப்பு பணி, சுற்றுச்சுவர் பணி ஆகியவை முடிந்து அரசாணை வந்துவிட்டது. ஆனால் இன்னும் ஸ்டாலின் இதனை நம்ப மறுக்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் எடுத்த காரியத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். எனவே மத்திய அரசிடம் பெற வேண்டிய நிதியை பெற்று இன்னும் 3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்