சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும்: 5 மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இந்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.