சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. அன்று சென்னையில் கனமழை கொட்டி சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியது. அதன் பின்னர் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.
நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில் காலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.