எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; நடிகர் விஜய் பேட்டி

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் பேட்டியளித்து உள்ளார்.

Update: 2020-11-05 13:53 GMT
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.  தமிழகத்தில் திராவிட கட்சிகள் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தில் நீடித்து வரும் சூழல் காணப்படுகின்றன.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அனுபவம் பெற்றுள்ளார்.  தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கும் தயாராகி வருகிறார்.  இதற்காக அவர் போட்டியிடும் தொகுதி பற்றியும் ஆவலுடன் மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று மறுபுறம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி அதற்கான நடவடிக்கையில் இறங்கி வரவேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியானது.  விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது.  கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.

இதுபற்றி, நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறும்பொழுது, விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது.  நடிகர் விஜய் எதிர்காலத்தில் இந்த கட்சியில் இணைவாரா என்பது பற்றி அவரிடமே நீங்கள் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் அளித்துள்ள பேட்டியில், எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  எனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் இணைய வேண்டாம் என ரசிகர்களை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்