பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் 23-ந்தேதி தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் இணைப்பு கல்லூரிகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வருகிற 23-ந்தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
2020-21-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி தொடங்கி, 28-ந்தேதியுடன் நிறைவு பெற்று இருக்கிறது. முதலில் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 497 மாணவ-மாணவிகளும், அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வில் 69 ஆயிரத்து 752 மாணவ-மாணவிகளும் இடங்களை தேர்வு செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டிலும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து இருக்கிறது. மொத்தம் காலியாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கிட்டதட்ட 93 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்தநிலையில் கலந்தாய்வு முடிக்கப்பட்ட மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, பி.இ., பி.டெக்., பி.ஆர்க். (முழுநேரம்) பொறியியல் படிப்புகளை கொண்ட தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 23-ந்தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது என்றும், இவர்களுக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 24-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட நாட்களில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் (16.1.2020 தவிர) வகுப்புகள் நடத்தப்பட்டு, ஒரு வாரத்துக்கு 6 நாட்கள் வீதம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
முதலாமாண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தொடங்கும் என்றும், அதேபோல், அவர்களுக்கான பருவத் தேர்வு மார்ச் மாதம் 8-ந்தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.