போயஸ் கார்டனில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி திடீர் ஆலோசனை
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஆலோசனை நடத்தினார். அவரின் உடல் நலம், அரசியல் சூழல், அரசியல் செயல் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை சம்பந்தமாக டாக்டர்களின் அறிவுரை குறித்து வெளிவந்த தகவல் உண்மை எனவும், தகுந்த நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியுடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன் தினம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் சிலர் குவிந்தனர். அவர்கள் அனைவரும், ‘இப்ப இல்லைனா. எப்பவும் இல்ல’, என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்ட டி.சர்ட் அணிந்திருந்தனர். பின்னர் ரஜினிகாந்தை வாழ்த்தி கோஷம் எழுப்பிய பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.