மனுதர்ம நூலில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றது அதை ஏன் சொல்லவில்லை? - நடிகை குஷ்பு கேள்வி

மனுதர்ம நூலில் இருக்கும் நல்ல விஷயங்கள் குறித்து திருமாவளவன் ஏன் சொல்லவில்லை? என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-10-27 14:23 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்டோர் கேளம்ப்பாகத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு, சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதன் பிறகு நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“மனுதர்ம நூலில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஏன் திருமாவளவன் சொல்லவில்லை? 3500 ஆண்டுக்கு முன் கூறப்பட்டிருப்பது இப்போது முக்கியமா?

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் திருமாவளவன் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. நான் இங்கு ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல.

பா.ஜ.க. மீது யாரும் எந்த குற்றமும் சுமத்த முடியாது. பெண்கள் குறித்து கருத்து சொல்பவர்கள் முதலில் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். கொள்கைகளை அவரவர் வீட்டில் இருந்து துவங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்