கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் தொடக்கம் - ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டம்

கீழடியில் இன்று தொடங்கப்பட்டுள்ள அருங்காட்சியக கட்டிடப் பணிகள், ஓராண்டிற்குள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-10-20 09:31 GMT
கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் தொடக்கம் - ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டம்
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், அரசு முத்திரை, வரிவடிவ பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.

2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி அறிவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வற்புறுத்தி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே, 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கார் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்படவுள்ள 6 கட்டிடங்களில் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அகழாய்வுப் பணிகள் குறித்த ஒளி, ஒலி காட்சிக்கென தனி கட்டிடம் கட்டப்படவுள்ள நிலையில், இந்த பணிகள் ஓராண்டிற்குள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்