ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தாமதம் ஆவது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தை பார்க்கும்போது ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-10-18 23:30 GMT
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மறைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே பதவி மற்றும் வேறு சில பிரச்சினைகள் உருவானதை தொடர்ந்து 2017 பிப்ரவரி 7-ந் தேதி திடீரென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன விரதம் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதை ‘தர்மயுத்தம்-1’ என்று கூறி, ஏதோ அதர்மத்தை அழிக்க நடந்ததாக சொல்லப்படும் மகாபாரத யுத்தம் போல வெளி உலகத்தை ஏமாற்றுவதற்காக கோமாளிக் கூத்து ஒன்றை அரங்கேற்றம் செய்தார்.

அந்த சுயநல கபட நாடகத்தை தொடங்கிய போது, ‘சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார். இந்த குழப்பத்துக்கு இடையே எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக முடிசூட்டிக்கொண்டார். அரசியல் நோக்கத்துடன், பஞ்சாயத்து செய்தது பா.ஜ.க. இந்த பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில், ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்பின்பு துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், ‘தர்மயுத்தம்-1’ என்பதை முடித்துக்கொண்டார். சி.பி.ஐ. விசாரணை என்ற கோரிக்கையையும் கைவிட்டார். இதைத்தொடர்ந்து, 25.9.2017 அன்று, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார்.

இந்த கமிஷன் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் 37 மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், இன்னும் விசாரணை முடிவடையவில்லை. ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது அப்பல்லோ மருத்துவமனை. இந்த தடையை நீக்க வழி தெரியாமல் 18 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பம்மாத்து செய்கிறார்.

முதல் ரவுண்டில் ‘தர்மயுத்தம்’ நடத்தி துணை முதல்-அமைச்சர் பதவி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்-2’ என்ற பேரில் அடுத்த மிரட்டலை தொடங்கினார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் சம்மனை நினைவூட்டியதாலும், வேறு சில காரணங்களினாலும், ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று ஆசி வழங்கி 2-வது தர்ம யுத்தத்தையும் முடித்துக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிலையில் தான் விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதம் ஆவதை தமிழக அரசின் வக்கீலும், கூடுதல் அரசு தலைமை வக்கீலும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இதை பார்க்கும்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சதியை விசாரித்து வெளியிடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்றும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதை சிறிதும் விரும்பவில்லை என்றும் நன்றாக தெரிகிறது. இந்த குற்றச்சாட்டு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவி சுகத்திற்காக விசாரணை ஆணையத்தை முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை கண்டுபிடித்து வெளிக்கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இவர்கள், விசாரணை என்பதை அர்த்தமற்றதாக ஆக்கி இருக்கிறார்கள். தமிழக மக்களின் பேராதரவை பெற்று, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்களில் கூறியபடி ஜெயலலிதா மரணத்தில் உள்ள சதியை விசாரித்து குற்றவாளிகளின் முகத்திரையை விலக்கி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்