ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணுக்கு இந்திய வீரர்கள் பயணம் - இஸ்ரோ தீவிர நடவடிக்கை
ககன்யான் திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விண்ணில் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது.
சென்னை,
இந்தியா தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டை நிறைவு செய்யும் போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் 2022-ம் ஆண்டில் 5 முதல் 7 நாட்களுக்கு 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இந்த பணிக்காக இந்திய விமானப்படையின் 4 உறுப்பினர்களை இந்தியா தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கான பயிற்சி ரஷியாவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதங்களாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ககன்யான் திட்டப்பணிகளை இஸ்ரோ மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்திய மனித விண்வெளி பயணம் வருகிற 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய மண்ணில் இருந்து விண்ணுக்கு வீரர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இருப்பினும் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்படும் இடையூறுகள் காரணமாக சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்.டிஓ.) தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம் பணிக்கு உதவுகின்றன. குறிப்பாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் வீரர்களின் விண்வெளி தர உணவு, வீரர்களின் சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவுகின்றன.
இதுதவிர ககன்யான் தயாரிப்புகளில் சர்வதேச விண்வெளி நிறுவனங்களும் உதவுகின்றன. குறிப்பாக விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியை ரஷியாவும், விண்வெளி வீரர்களுக்கான மருத்துவ தொழில்நுட்பத்தை பிரான்சும், திட்ட உதவிகளை அமெரிக்காவின் நாசாவும் செய்து வருகிறது.
இந்தியாவின் விண்வெளி திறன்களை முன்னேற்றுவதற்காக 59 நாடுகளுடன் விண்வெளி ஒத்துழைப்பு துறையில் 250 ஆவணங்களில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. மேலும் விண்வெளி துறையில் ஆர்வம் உள்ள பிற நாடுகளுக்கு விண்வெளியில் இருந்து பயனடைய உதவுகிறது.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.