‘அரியர்’ மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க முடிவு - சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு அறிவித்தபடி அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதற்கு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-18 22:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் தேர்வுகள் தொடர்ந்து தள்ளிப்போனது. இதையடுத்து அரசு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததோடு, அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவுரைகளையும் வெளியிட்டது. இதுதவிர அரியர் வைத்திருந்த மாணவர்களில் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை அந்தந்த பல்கலைக்கழகங்கள் நடத்தி முடித்து தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு விட்டது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வில் 99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே அரசு அறிவித்தபடி தேர்வு கட்டணம் செலுத்தி அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்குவது பற்றி சென்னை பல்கலைக் கழகம் யோசித்து வந்தது. இதற் காக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும், குறைந்தபட்ச தேர்ச்சி வழங்குவதில் விருப்பமில்லாத மாணவர்கள் அடுத்த முறை நடைபெறும் தேர்வை எழுதி தேர்ச்சி மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்