இட ஒதுக்கீடு உரிமை பறிப்பு: பொதுத்துறை வங்கிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-15 03:20 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 4 பொதுத்துறை வங்கிகளுக்கான 1,417 அதிகாரிகள் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 சதவீதம் குறைத்து 21 சதவீத இட ஒதுக்கீடும், எஸ்.சி. பிரிவினருக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் 2 சதவீதத்தை குறைத்து 13 சதவீத இட ஒதுக்கீடும், எஸ்.டி. பிரிவினருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 1.5 சதவீதத்தை குறைத்து 6 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி குறைக்கப்பட்டதால் கிடைத்த 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய துரோகச் செயலாகும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்து சட்டவிரோதமாகத் தேர்வு நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த தேர்வுகளை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு உரிமையில் பா.ஜ.க. அரசு கை வைத்தால் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்