தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் நாளை முதல் ஓடும் - 174 நாட்களுக்கு பிறகு இயக்கம்

தமிழகத்தில் 174 நாட்களுக்கு பின்னர் ஆம்னி பஸ்கள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-10-15 00:57 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ரெயில், அரசு மற்றும் தனியார் பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வீரியம் குறைய, குறைய அதற்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை தொடங்கியது. ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கப்படவில்லை என்றாலும், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆம்னி பஸ் சேவை மட்டும் தொடங்காமல் இருந்து வந்தது. ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்துக்கான சாலை வரியை அரசு ரத்து செய்தால் மட்டுமே, ஆம்னி பஸ்சை இயக்குவோம் என்று உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

தங்களுடைய கோரிக்கை நிறைவேறியதையடுத்து ஆம்னி பஸ்களை மீண்டும் எப்போது இயக்கலாம் என்பது குறித்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் 16-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 174 நாட்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த தொழிலை சேர்ந்த 2 லட்சம் பேரும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு இருந்தோம்.

இந்தநிலையில் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பஸ்களை இயக்காத காலகட்டமான கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாதத்துக்கு சாலைவரி, ‘பி.வி.ஆர். நில் அசஸ்மெண்ட்’ மூலம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

எங்களுடைய கோரிக்கை நிறைவேறியதையடுத்து 16-ந்தேதி (நாளை) முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் பஸ்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பஸ்சில் ஜன்னல் திரை, இருக்கை துணிகள் அகற்றப்படும். மத்திய, மாநில அரசுகளின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும். இதற்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு உடனடியாக தொடங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் வேளையில் ஆம்னி பஸ்கள் மீண்டும் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்து உள்ளது.

மேலும் செய்திகள்