தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
சென்னை,
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தேர்தல் அறிக்கையில் இடம் பெறவேண்டிய சாராம்சங்களை கட்சியினர் தெரிவிக்கலாம் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. ‘எல்லோருடன் நம்முடன்’ என்ற திட்டத்தின் மூலம் இணையவழியில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. சார்பில் 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தின் முரசொலிமாறன் வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறச்செய்யவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.