கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு மருத்துவம், கல்வி உதவி நிதியாக ரூ.2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக ரூ.2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழைகளுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக ரூ.2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து கருணாநிதி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதி அறக்கட்டளைக்காக தனது சொந்த நிதியில் இருந்து கருணாநிதி அளித்த 5 கோடி ரூபாய் வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையை கொண்டு, மாதம் தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ரூ.5 கோடியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு வந்தநிலையில் 10.1.2007 அன்று இந்த நிதியில் இருந்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மீதமுள்ள 4 கோடி ரூபாயில் இருந்து வரும் வட்டி மூலம் 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது வரை ரூ.5 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நாகை ஏ.முருகேசன், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அ.காந்தி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சி.தங்கப்பா, நாமக்கல் மாவட்டம் ப.குமாரபாளையம் டி.கே.பழனிசாமி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பி.ப.நடராஜன், மதுரை மாவட்டம் முத்துப்பட்டி சி.ஆறுமுகம், விருதுநகர் மாவட்டம் சேலைகவுண்டன்பட்டி எஸ்.மகாலட்சுமி, கன்னியாகுமரி மாவட்டம் தேரிமேல்விளையைச் சேர்ந்த ஏ.நாகு ஆகிய 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகையை சைதாப்பேட்டை நாகை ஏ.முருகேசனுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வழங்கினார்.
மற்றவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வர வேண்டியது இருப்பதால் அவர்கள் வந்து செல்லும் செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) உதவித்தொகை அனுப்பப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.