எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு கவர்னர், ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நல குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
தவுசாயம்மாளுக்கு எடப்பாடி பழனிசாமி, கோவிந்தராஜ் என்ற 2 மகன்களும், ரஞ்சிதம் என்ற விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எடப்பாடி பழனிசாமி மீது எல்லையில்லா அன்பு கொண்டு தியாக உணர்வுடன் அவரை வளர்த்தவர் என்ற அடிப்படையில் தவுசாயம்மாளின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இந்த துயரமான நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி பெறவும், தாங்கமுடியாத இந்த இழப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டு வரவும் இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன். பெற்றெடுத்து, பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச்செய்த அன்பு தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்?
பாசமிகு தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், அ.தி.மு.க. சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தாயார் தவுசாயம்மாள் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்-அமைச்சருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இதேபோல சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் சே.கருணாஸ் எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் யாதவ், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் வேட்டவலம் மணிகண்டன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா.அருணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் இரா.அதியமான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.