முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவு - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சேலம்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.
தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பின்னர் முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.