பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் படுகொலை மலை அடிவாரத்தில் வெட்டிச்சாய்த்த கும்பல்

மதுரை அருகே மலை அடிவாரத்தில் பஞ்சாயத்து தலைவர், ஊழியர் படுகொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

Update: 2020-10-12 23:18 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50). சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்தார்.

அதே பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்து விடும் ஊழியராகவும், எலக்ட்ரீசியனாகவும் பணியாற்றி வந்தவர் முனியசாமி(39). இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தினமும் மாலை நேரத்தில் குன்னத்தூர் அருகே உள்ள ஒரு மலை அடிவாரத்திற்கு சென்று சற்று நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மலை அடிவாரத்தின் கீழ் பகுதியில் அமர்ந்து பேசி உள்ளனர். இரவில் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவர்களது குடும்பத்தினர் இருவரையும் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று அதிகாலை நேரத்தில் மலைப்பகுதியில் நாய்கள் குரைத்தன. இதனை கவனித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது முனியசாமியும், பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணனும் கொடூர வெட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு கிடந்தனர்.

தகவல் அறிந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் பரிசோதனைக்காக எடுக்க முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும், கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோல் இறந்த 2 பேரின் உறவினர்கள் உள்பட பலர் திரண்டு மதுரை- சிவகங்கை சாலையில் வரிச்சியூர் பகுதியிலும் மறியல் செய்தனர். அப்போது சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை வைத்தும், பெரிய கற்களை போட்டும் அடைத்தனர்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் 2 பேரது உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதன்பின்னரே அங்கு கூடியிருந்த மக்கள் கலைய தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த பதற்றம் தணிந்தது. அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரியவருகிறது. 5-க்கும் மேற்பட்டோர் இந்த இரட்டைக்கொலையில் ஈடுபட்டு இருக்கலாம். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலையாளிகள் யார்? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்