6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணமடைந்தனர் தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. மேலும் இதுவரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 88 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 53 ஆண்கள், 1,962 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 12 வயதுக்கு உட்பட்ட 73 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 477 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,250 பேரும், கோவையில் 389 பேரும், சேலத்தில் 294 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 19 பேரும், பெரம்பலூரில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 80 லட்சத்து 84 ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 505 ஆண்களும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 849 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 835 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 ஆயிரத்து 318 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சராசரியாக 4 ஆயிரத்தை தாண்டியது.
65 பேர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 26 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 65 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், கோவை, தர்மபுரியில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், திருவாரூர், வேலூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூரில் தலா இருவரும், மதுரை, நாமக்கல், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என 22 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 252 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
5 ஆயிரத்து 5 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேரும், கோவையில் 390 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 95 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.