ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ரூ.2,369 கோடி சாலை டெண்டர் ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட ரூ.2,369 கோடி சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-10 00:23 GMT
சென்னை,

தமிழகத்தின் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மத்திய அரசின் 14-வது நிதிக்குழுவின் பரிந்துரை யின் பேரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி ஒவ்வொரு ஊராட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி சாலை மேம்பாட்டுக்காக 2019-20-ம் ஆண்டுக்கு ரூ.2,369.86 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் தேவை. ஆனால் ஊராட்சி மன்ற தீர்மானங்கள் இல்லாமலேயே தமிழக அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலர் மூலமாக தன்னிச்சையாக சாலை மேம்பாட்டு திட்டங்களை தேர்வு செய்து ஒப்புதல் அளித்து வருகிறது.

ஊராட்சி மன்றம் மற்றும் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு, அதிகாரிகள் மூலம் திட்டங்களை தேர்ந்து எடுத்து செயல்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே, சட்டவிரோதமான இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர், ‘அரசியலமைப்பு சட்டப்பிரிவில் கொண்டு வந்த திருத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தில் மாநில நிர்வாகம் தலையிட முடியாது. ஆனால், இந்த சட்ட விதிகளுக்கு முரணாக ஊராட்சிகளின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக தனி அதிகாரிகளை நியமித்து சாலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது’ என்று வாதாடினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2019 நவம்பர் 5-ந் தேதி சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால், 2019 டிசம்பரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2020 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் 2020 ஆகஸ்டு 18-ந் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் டெண்டர் பணிகளுக்கான நடைமுறைகளை இறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. எனவே, அதுவரை சாலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரியவருகிறது.

அதுமட்டுமல்லாமல் 2020 பிப்ரவரி 14-ந் தேதி நடந்தசட்டப்பேரவை கூட்டத்தில் தான் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கு முன்பே இந்த டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது என்ற கேள்வி எழவில்லை.

நிதி ஒதுக்கீட்டுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளுக் கான பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுள்ளனர். எனவே, சாலை மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்ததாரர்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும்.

கோர்ட்டில் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பார்க் கும்போது டெண்டர் விவகாரத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டு நிதிக்கான காசோலையில் கையொப்பமிடும்போது மட்டும் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப்படுகிறது. இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரங்களுக்கு எதிரானது என்பது புலனாகிறது.

ஊராட்சிகள் சுதந்திரமான முறையில் முடிவெடுத்து அவற்றை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பஞ்சாயத்து ராஜ் முறை அங்கீகாரம் பெறும். அரசியலமைப்பு சட்டத்தில் ஊராட்சிகளுக்கு தரப்பட்டுள்ள அதிகாரம் மூலம் நிதிக்குழுவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அறிவித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் எங்கெல்லாம் பணிகளுக்கான உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றதோ அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சபைகள் கூடி முடிவெடுத்து ஊராட்சிகளுக்கான நிதியை பயன்படுத்த வேண்டும். நிதியை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணிகளுக்கான புதிய டெண்டர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளியிட வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்