திண்டுக்கல் சிறுமி மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் சலூன் கடைகள் அடைப்பு அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் சிறுமி மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-10 00:08 GMT
சென்னை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி குறுவம்பட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் நடந்தது தமிழ்நாட்டையே இது உலுக்கியது.

இந்த வழக்கில் எதிர் வீட்டில் வசித்த கிருபானந்தன் (வயது 19) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 29-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பு சிறுமியின் பெற்றோரை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. மரணம் அடைந்த சிறுமி முடி திருத்துவோர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மருத்துவ நலசங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டன.

அதன்படி, தமிழகம்முழுவதும் சுமார், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நேற்று மூடப்பட்டன.

மாவட்டம் தோறும் முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் எஸ்.கே.செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், மருத்துவர் குல உறவின்முறை சங்கம் உள்பட மேலும் பல்வேறு முடிதிருத்தும் தொழிலாளிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதே போன்று, கிண்டியில் தமிழ்நாடு மருத்துவ நலசங்கம், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலசங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில், திண்டுக்கல் சிறுமியின் வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும். மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்