கூட்டணி குறித்து தெரிவித்த கருத்து ‘யார் உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ - துரைமுருகன் அறிக்கை

கூட்டணி குறித்து தெரிவித்த கருத்தால் யார் உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக தான் மிகவும் வருந்துவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-03 22:27 GMT
சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்று (நேற்று முன்தினம்) நடந்த கிராமசபை கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, என்னை சந்தித்த செய்தியாளர்கள், “தி.மு.க. கூட்டணியில் யார், யார் இருப்பார்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு, “இப்போது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதும் கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது” என்றுதான் நான் கூறினேன்.

வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக்கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால் எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக்கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன்.

பொதுவாக நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். எனவே யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான், மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால், எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழாதவாறு நானும் நடந்துக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்