ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-21 23:00 GMT
சென்னை,

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 கோவில்களின் உபரி நிதியில் இருந்து ரூ.10 கோடியை சிறு கோவில்களுக்கு வழங்க வேண்டும் என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோன்று, ‘இந்து அறநிலையத்துறை கோவில்களின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று ‘இண்டிக் கலெக்டிவ்’ என்ற அமைப்பும், டி.ஆர்.ரமேஷ் என்பவரும் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘அறங்காவலர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நிதி ஒதுக்குவது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அறங்காவலர்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறாமல் நிதி ஒதுக்கும்படி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அப்படி ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இடைக் கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தயாராகி வருகிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை 24-ந்தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்