சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Update: 2020-09-20 00:03 GMT
சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 19-6-2017 அன்று முதல்-அமைச்சர் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒரு லட்சம் சதுர அடியில் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்” என்ற பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 767 சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் ரூ.39 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்தை முதல்-அமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

இப்புதிய கட்டிடத்தின் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அலுவலகம், இணை இயக்குநர் அறைகள், பொது கூட்டரங்கு,

இரண்டாம் தளத்தில் பள்ளி கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் அறைகள், மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள், நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம், இணை உறுப்பினர் அறைகள், துணை இயக்குநர் அறை, உறுப்பினர்கள் அறைகள், ஐந்தாம் தளத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகங்கள், கூட்டரங்கு,

ஆறாம் தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், கூட்டரங்கு மற்றும் அலுவலக அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வரவேற்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம், மின் தூக்கிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டம் கோமங்கலம்புதூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 5 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர், என மொத்தம் ரூ.49.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளி கல்வி இயக்ககத்தின் அமைச்சு பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்