கடத்தி கொல்லப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

தட்டார்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-19 23:36 GMT
தூத்துக்குடி,

தட்டார்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் நாம் தமிழர் கட்சி பஞ்சாயத்து செயலாளராக இருந்தார். கடந்த 17-ந்தேதி சொத்து பிரச்சினை தொடர்பாக இவரை ஒரு கும்பல் கடத்தி சென்று, அடித்துக்கொலை செய்து, உடலை நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காட்டு பகுதியில் வீசிச் சென்றது.

இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் திசையன்விளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சொக்கன்குடியிருப்பு கிறிஸ்தவ ஆலயம் முன்பு செல்வனின் குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் செல்வனின் உடல் நேற்று மதியம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடலை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டதால் மீண்டும் பிணவறையிலேயே வைக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்