6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறப்பு

6 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று மும்முரமாக நடந்தது.

Update: 2020-09-17 23:11 GMT
சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காய்கறி சந்தை திருமழிசை துணைக்கோள் நகரத்திலும், பழச்சந்தை மாதவரம் பஸ் நிலையத்திலும், பூ மார்க்கெட் வானகரத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவு தானிய வணிக வளாகம் மாற்று இடம் ஒதுக்கப்படாத நிலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இதனால் 6 மாதங்களுக்கும் மேலாக உணவு தானிய வளாகம் மூடிக் கிடந்தது.

இந்தநிலையில் கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் 18-ந்தேதி (இன்று) திறக்கப்படும் என்றும், காய்கறி சந்தை 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அரசு அறிவிப்பைத் தொடர்ந்து உணவு தானிய வணிக வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கடைகள் சீரமைப்பு பணி நடந்தது. நேற்று உணவு தானியங்கள் மூட்டை மூட்டைகளாக வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த கடைகளில் இறக்கப்பட்டன. அந்த வகையில் உணவு தானிய வணிக வளாகம் திறப்பதற்காக ஆயத்தப்பணிகள் அனைத்தும் தயாராகவே இருந்தன.

அதேவேளை தொடர்ந்து 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் கடைகளில் இருந்த உணவு தானியங்கள் அனைத்தும் வீணாகி விட்டது என்றும், இதனால் ஒரு கடைக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது, அதற்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்