அச்சு ஊடகங்களுக்கு வரி குறைப்பு குறித்து நிதி அமைச்சகத்துடன் கலந்துபேசி முடிவு வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில்

அச்சு ஊடகங்களுக்கு வரி குறைப்பு குறித்து நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட இருப்பதாக வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

Update: 2020-09-17 23:00 GMT
சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதாவது, செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் விற்பனை தொழிலில் ஏற்பட்டுள்ள இழப்புகளை கவனத்தில் கொண்டு, சுங்க வரிக் குறைப்பு செய்யுமாறு கேட்டு அச்சு ஊடகங்களின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதா?, அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் விளக்கம் என்ன?, வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கவனத்தில் கொண்டு, உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுமா?. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து விளக்கம் தருக என்று கேட்டிருந்தார்.

நிதி அமைச்சகத்துடன் கலந்துபேசி முடிவு

அதற்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:-

மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்திய அச்சு ஊடகக் குழுமங்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வருவாய் இழப்பு காரணமாக, அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 5 சதவீதம் அடிப்படை சுங்க வரியை நீக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள். இதுகுறித்து, நிதி அமைச்சகத்துடன் கலந்துபேசி உரிய முடிவு எடுக்கப்படும்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020-2021-ம் ஆண்டுக்கான முதல் 3 மாத கால உரிமத்தொகை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்