நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமா? இருதரப்பும் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடந்தது.

Update: 2020-09-17 21:42 GMT
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமா? அல்லது கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டுமா? என்பது குறித்து இருதரப்பினரும் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான ஓட்டுக்களை எண்ணக்கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

அதேநேரம், இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த தேர்தலை ரத்து செய்தார். மறு தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபீர், ஓம்பிரகாஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளை தொடர்ந்து நடத்துவது ஏன்? பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டுமே தவிர இந்த சட்ட போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றால், மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாமா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஓம்பிரகாஷ், கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை. ஏற்கனவே பதிவான ஓட்டுக்களை எண்ண உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

அப்போது, “தொழில் முறை உறுப்பினர்களை, தொழில் முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றியதால், 400 உறுப்பினர்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுள்ளது’ என்று எதிர்தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து, நீதிபதிகள், ‘இந்த வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று மறு தேர்தல் நடத்துவதா? அல்லது கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டுமா? என்பது குறித்து இரு தரப்பினரும் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்