வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

வண்டலூர் மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

Update: 2020-09-17 05:57 GMT
சென்னை, 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 711 மீட்டர் நீளம், 23 மீ அகலம் கொண்ட 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வண்டலூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “வண்டலூர் மேம்பாலம் மூலம் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதேபோல பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை ஆகிய சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்.

முன்னதாக பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் செய்திகள்