“கொரோனாவை பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை” சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டு

கொரோனாவை பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டினார்.

Update: 2020-09-16 00:00 GMT
சென்னை, 

கொரோனாவை பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டசபையில் நேற்று தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், சட்டமன்றத்துக்கு வெளியே கட்சியின் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வுக்காக நீதிமன்றத்திலே வழக்கு நடக்கும்போது இந்த வழக்கிலே பல வக்கீல்கள் ஆஜரானார்கள். அதிலே நளினி சிதம்பரமும் ஒரு வக்கீல் என்றார். அப்படி என்றால் காங்கிரஸ் வேண்டும் என்றே இந்த ‘நீட்’ தேர்வை ஆதரிக்கிறது என்றார். காங்கிரஸ் ‘நீட்’ தேர்வு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்றோம்.

ஒருவர் நீதிமன்றத்தில் வக்கீலாக ஆஜராகியிருப்பார். அதை இல்லை என்று சொல்வதற்கில்லை. அதை காரணம் காட்டி சட்டமன்றத்துக்கு வெளியே இருக்கக்கூடிய ஒருவரை பற்றி, சட்டமன்றத்துக்கு உள்ளே பேசுவதை அனுமதிக்கக்கூடாது என்று சொன்னோம். அவர் அதை தடுக்கவில்லை.

இந்த அரசை பொறுத்தவரை ‘நீட்’ தேர்வை எதிர்த்து மத்திய அரசிடம் பேச திறமை இல்லை. திராணி இல்லை. ஏன் தயக்கம் காட்டுகின்றனர்?. இவர்கள் அத்தனை பேரும் ஊழல் செய்தவர்கள். இவர்கள் பட்டியல் அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கிறது. எந்த நேரத்திலும் இவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறது என்பதால் அஞ்சுகின்றனர்.

‘நீட்’ தேர்வு பற்றி பேசிய இன்பதுரை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டவர். அவர் வெற்றி பெற்றாரா? என்பதிலும் இன்னும் சந்தேகம் உள்ளது. மறு எண்ணிக்கை முடிந்தும் இன்று வரை நீதிமன்றம் முடிவை சொல்லவில்லை. அவரை பேசவிட்டு தி.மு.க., காங்கிரசை வஞ்சம் தீர்க்க நினைக்கின்றனர்.

கொரோனா காரணத்தை வைத்து ஊழல் செய்கின்றனர். கமிஷன் வாங்குகின்றனர். இதை வைத்து தமிழக மக்களை பகடைக்காயாக மாற்றுகின்றனர். இதே போக்கு நீடித்தால் தமிழக மக்கள் கொரோனாவில் இருந்து தப்பிக்கவே முடியாது. இவர்கள் கொரோனாவை பற்றி கவலைப்படவில்லை. அதில் என்ன வருமானம் வருகிறது என்பதிலே கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள். அயோக்கியர்கள், கமிஷன் வாங்குபவர்கள் லஞ்சம் வாங்குபவர்களை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். அதற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். வெளிநபர்களை உள்ளே பேச அனுமதிக்க கூடாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது என்று சொன்னோம். இதற்காக எங்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியே போட்டிருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இந்த அராஜக ஆட்சி ஒழிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்